கொரோனா பீதியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

மங்களூரு அருகே கொரோனா பீதியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.;

Update: 2021-08-17 20:30 GMT
மங்களூரு:

கணவன்-மனைவி

  தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சித்ராப்புரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் லாரிகளை வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி குணா ஆர்.சுவர்ணா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது.

  இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை 13-வது நாளில் உயிரிழந்துவிட்டது. மேலும், சுவர்ணாவுக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் தினமும் 2 இன்சூலின் ஊசி போட்டு வந்ததாக தெரிகிறது.

கொரோனா பீதி

  குழந்தை இல்லாத நிலையில் மனம் உடைந்த நிலையில் வசித்து வந்த ரமேஷ்- சுவர்ணா தம்பதி ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பீதி அடைந்தனர்.

  ஏற்கனவே சுவர்ணா இன்சூலின் ஊசி எடுத்து வருவதால் கொரோனா பாதிக்கப்பட்டால் உயிர்பிழைப்பது கஷ்டம் என அந்த தம்பதியினர் கருதினர். இதனால் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

போலீசுக்கு தகவல் கொடுத்தனர்

  அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் காலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரின் செல்போன் வாட்ஸ்-அப்புக்கு ஆடியோ ஒன்று அனுப்பியுள்ளனர். அதில் தங்களை கொரோனா தொற்று தாக்கி விட்டதாகவும், நாங்கள் பிழைப்பது
கடினம். எனவே நாங்கள் தற்கொலை செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

  இந்த ஆடியோவை கேட்டறிந்த போலீஸ் கமிஷனர் சசிகுமார், உடனே அவர்களிடம் தற்கொலை முடிவை கைவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்பிறகு அவர்கள் பதில் எதுவும் அளிக்கவில்லை.இதனால் போலீஸ் கமிஷனர், தற்கொலை செய்யப்போவதாக கூறிய தம்பதியின் முகவரியை கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் ஊடகத்தினர் உதவியுடன் போலீசார், ரமேஷ்- சுவர்ணா தம்பதியின் வீட்டு முகவரியை கண்டுப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

  இதற்கிடையே தம்பதி ரமேஷ் -சுவர்ணா இருவரும் தங்களது வீட்டில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்துகொண்டனர். இதற்கு மத்தியில் போலீசார், இந்த தம்பதியின் முகவரியை கண்டுபிடித்து சினிமா பட பாணியில் அவர்களது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர். ஆனால் அதற்குற் தம்பதி தற்கொலை செய்துவிட்டனர். இதனால் அவர்களின் உடல்களை போலீசார் அதிர்ச்சியும், சோகம் அடைந்தனர்.

  பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மங்களூருவென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தம்பதி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதமும், ரூ.1 லட்சம் பணமும் வீட்டில் இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

ஆதவற்றோர் இல்லத்துக்கு சொத்துக்கள்

  அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
  கொரோனா தொற்றால் நாங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதுகிறோம். ஏற்கனவே சுவர்ணா சர்க்கரை நோய் உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால் நாங்கள் உயிருடன் வாழ விரும்பவில்லை. நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது உடல்களை இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்ய ரூ.ஒரு லட்சம் பணம் வைத்துள்ளோம். அதை எடுத்துக்கொள்ளவும்.

  மேலும் எங்களது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெரும் சோகம்

  இந்த சம்பவம் தொடர்பாக சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லை

  கொரோனா பீதியில் ரமேஷ்- குணா சுவர்ணா தம்பதி தற்கொலை முடிவை தேடிக்கொண்டனர். இந்த நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு முன்னதாக இருவரின் உடல்களில் இருந்து ரத்தம், சளி மாதிரி சேகரித்து போலீசார் கொரோனா பரிசோதனை நடத்தினர். 

ஆனால் கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்று மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்துள்ளார். கொரோனா பீதியில் தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட இந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

மேலும் செய்திகள்