மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவேன்; குமாரசாமி பேட்டி
மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவேன் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
ராமநகர் மாவட்டம் சென்னபட்டணாவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
பசவராஜ் பொம்மையை சந்தித்து...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த திட்டம் குடிநீருக்கானது. ம7ேகதாது திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அது வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இதுபோல், மகதாயி நதிநீர் விவகாரம், எத்திஒலே குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. மேகதாது உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன்.
மாநிலத்தில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கவர்னர் மூலமாக ஜனாதிபதிக்கு மனு அளிக்க வேண்டும். குடிநீர் திட்டமான எத்தினஒலேக்காக ரூ.23 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தாமல் தாமதித்துவருவதால், அந்த திட்டத்தின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியாக உயரும் வாய்ப்புள்ளது. எனவே எந்த ஒரு குடிநீர் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்தையும் தாமதம் இன்றி செயல்படுத்துவதற்கு அரசு முன் வர வேண்டும்.
அவதூறாக பேசுவது சரியல்ல
நாட்டின் பிரதமர்கள், முக்கிய தலைவர்கள் பற்றி அவதூறாக பேசுவது சரியல்ல. கடந்த சில நாட்களாக நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் பேசுவது சரியானது இல்லை. நமது நாட்டுக்காக, அவர்கள் செய்திருக்கும் நன்மைகள், தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும். தலைவர்கள் பற்றி வாய்க்கு வந்ததை பேசுவதை 2 தேசிய கட்சிகளின் தலைவர்களும் நிறுத்த வேண்டும்.
நாட்டின் சுதந்திரந்திற்காகவும், சுதந்திரம் அடைந்த பின்பு பிரதமராகவும் நேரு பணியாற்றி, நமது நாட்டை முன்னேக்கி செல்வதற்காக பாடுபட்டவர். ஒவ்வொரு தலைவரும் நாட்டுக்காக ஒவ்வொரு விதமாக பாடுபட்டுள்ளனர். அவர்கள் பற்றி தரக்குறைவாக பேசுவது, அவர்களுக்கு நரம் செய்யும் அவமானம் ஆகும். நாட்டையும் அவமதிப்பது போல மாறிவிடும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.