வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் விரைவாக வழங்க வேண்டும்; முதல்-மந்திரிக்கு, சித்தராமையா கடிதம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் விரைவாக வழங்க வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-08-17 19:50 GMT
பெங்களூரு:

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தோட்டக்கலை பயிர்கள்

  வட கர்நாடகத்தில் குறிப்பாக பாகல்கோட்டை, பெலகாவி, கதக் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நான் நேரில் ஆய்வு செய்தேன். அதே போல் உத்தரகன்னடா மாவட்டத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். அந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி பாதிப்புக்கு ஆளாயின.

  அதிகளவில் வீடுகள் இடிந்து விழுந்தன. மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். வீடுகளில் இருந்த பாத்திரங்கள், துணிமணிகள், புத்தகங்கள், உணவு தானியங்கள், தொலைக்காட்சி பெட்டி, கியாஸ் சிலிண்டர்கள் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. நெல் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

விரைவாக நிவாரணம்

  மாட்டு கொட்டைகளில் நீர் புகுந்து அங்கிருந்த கால்நடை தீவனங்கள் வெள்ளத்தில் கரைந்துவிட்டன. அந்த மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னம் நிவாரணம் வழங்கவில்லை. தாழ்வான பகுதிகளில் வீடுகளை அகற்றிவிட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு மேடான பகுதிகளில் வீடுகள் கட்டி தர வேண்டும்.

  மேலும் அடிக்கடி வெள்ளத்தில் சிக்கும் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களையும் வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நியாயமான அளவில் நிவாரண நிதியை பெற வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாாணம் வழங்க வேண்டும்.
  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்