மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் பீர்முகமதுஷா தலைமை தாங்கினார். திட்ட பொருளாளர் நாகையன், மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, திட்ட துணைத்தலைவர் பூலுடையார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
களப்பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்து நிரந்தரம் செய்யவேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் மின்வாரியத்தில் இல்லை என்ற தவறான மாதாந்திர அறிக்கையை கைவிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த பணிகளுக்கு உடனே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு வருகைப்பதிவேடு மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் திட்ட செயலாளர் வண்ணமுத்து நன்றி கூறினார்.