வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்

நாமக்கல் அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-08-17 19:14 GMT
நாமக்கல், ஆக.18-
நாமக்கல் அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஆட்டோ டிரைவர்
நாமக்கல் அருகே முத்துகாப்பட்டி மேதரமாதேவி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அர்ஜூனன் (வயது28). இவருடைய தம்பி ராஜேஸ்குமார். இவரது காட்டில் இருந்த முள்செடியை அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ரூ.1,000-க்கு விலைக்கு வாங்கி வெட்டி உள்ளார். அதில் ரூ.500 மட்டுமே கொடுத்த செல்வராஜ், மீதமுள்ள ரூ.500-ஐ கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இருவரது குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
கத்திக்குத்து
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி செல்வராஜூம், அவருடைய மகன் கார்த்திக் (25) என்பவரும் பழையபாளையம் பகுதியில் இருந்து முத்துகாப்பட்டிக்கு மொபட்டில் வந்தனர். முத்துகாப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நின்ற அர்ஜூனன், அவருடைய தம்பி ராஜேஸ்குமாருக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற கார்த்திக் கத்தியை எடுத்து வந்து, ஆட்டோ டிரைவர் அர்ஜூனனை கத்தியால் குத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், அவருடைய தந்தை செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ஜெயில்
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சம்பத் வாதாடினார். இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் என்பவருக்கு நீதிபதி சரவணன் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். செல்வராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட கார்த்திகை போலீசார் பாதுகாப்புடன் கோவை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்