குடிநீர் இணைப்பு வழங்காததால் பெண்கள் சாலைமறியல்
காதப்பாறை ஊராட்சியில் டெபாசிட் தொகை கட்டி 6 மாதமாகியும் குடிநீர் இணைப்பு வழங்காததால் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வேலாயுதம்பாளையம்,
டெபாசிட் தொகை
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காதப்பாறை ஊராட்சியில் தரணி நகர், முத்து நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெபாசிட் தொகை கட்டியுள்ளனர். ஆனால் டெபாசிட் தொகை கட்டிய பிறகும் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதுகுறித்து காதப்பாறை ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காதப்பாறை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலூர் செல்ல வேண்டிய அரசு பஸ், லாரி ஆகியவை செல்ல முடியாமல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.