முக கவசம் அணியாமல் சுற்றித்திரிவதால் பல கிராமப்பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முக கவசம் அணியாமல் சுற்றித்திரிவதால் பல கிராமப்பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போடிப்பட்டி,
முக கவசம் அணியாமல் சுற்றித்திரிவதால் பல கிராமப்பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அலட்சியப் போக்கு
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கொரோனா என்னும் பெருந்தொற்று, உலகம் முழுவதும் பலருடைய வாழ்க்கையில் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானவர்களின் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. கொரோனாவின் முதல் அலையின்போது மக்கள் மத்தியில் இனம் புரியாத அச்ச உணர்வு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வு விரைவில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உதவியாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட அலட்சியப் போக்கு 2-வது அலையின் தீவிரத்தை அதிகப்படுத்தியதுடன் அதிக இழப்புகளுக்கும் காரணமானது.
இந்தநிலையில் கொரோனா பரவலின் 3-வது அலை விரைவில் வரக்கூடும் எனவும் அது குழந்தைகளை அதிக அளவில் தாக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எச்சரிக்கை உணர்வு சிறிதளவும் இல்லாமல் கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றனர்.இவர்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட எந்தவிதமான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளையும் பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
விடுமுறைக் காலமல்ல
தற்போதைய நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதே தவிர முற்றுப் பெறவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.பொதுமக்கள் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்த வேண்டும். சிறுவர்கள் கூட்டமாக விளையாடச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.தவிர்க்க முடியாத நிலையில் வெளியே செல்ல நேர்ந்தால் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். இது பள்ளிகளுக்கான விடுமுறைக்காலம் அல்ல கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஓய்வு நேரம் என்பதை சிறுவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
மேலும் பெற்றோர் சிறுகுழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.நெருங்கிய உறவினராகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரராகவோ இருந்தாலும் குழந்தைகளைக் கொஞ்சுதல், முத்தமிடுதல் போன்றவற்றை செய்ய அனுமதிக்காதீர்கள்.ஒவ்வொரு தனி மனிதனும் அலட்சியம் காட்டாமல் முழுமையான எச்சரிக்கை உணர்வுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் 3-வது அலை என்பது வராமலேயே போகலாம்.
மேலும் வந்தபின் போராடுவதை விட வரும் முன் காப்பது சிறந்தது என்பதைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.