வாடகை செலுத்தாத மேலும் 12 கடைகளுக்கு ‘சீல்’

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத மேலும் 12 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.;

Update: 2021-08-17 17:23 GMT
ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத மேலும் 12 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

வாடகை நிலுவை

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளது. அந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டு மாதந்தோறும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடை உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை செலுத்தாமல் உள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் தலைமையில் வியாபாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் 1.7.2016-ந் தேதி முதல் வாடகை நிலுவை தொகை பாக்கி வைத்துள்ள உரிமையாளர்கள் கடந்த 10-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் மேற்கூரை தகரத்தால் ஆன கடைகள் நகராட்சியால் நிர்ணயித்த வாடகையில் 75 சதவீதம், ஆஸ்பெட்டாசீட் உள்ள கடைகள் 60 சதவீதம், கான்கிரீட் போடப்பட்ட கடைகள் 50 சதவீத நிலுவை தொகையை கணக்கிட்டு உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

12 கடைகளுக்கு சீல்

காலக்கெடு முடிந்ததால் நகராட்சி வருவாய் அலுவலர்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள கடைகளின் விவரங்களை சேகரித்து சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று நகராட்சி மார்க்கெட்டில் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த மேலும் 12 கடைகளை மூடி சீல் வைத்தனர். அதன் முன்புறம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதுகுறித்து அலுவலர்கள் கூறும்போது, ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மொத்தம் உள்ள ஆயிரத்து 587 கடைகளில் 172 கடை உரிமையாளர்கள் மட்டும் மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகின்றனர்.

மற்ற கடைகளின் உரிமையாளர்கள் சரிவர வாடகை செலுத்தவில்லை. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. சீல் நடவடிக்கை தொடரும். உடனடியாக நிலுவை தொகையை செலுத்தி கடும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்