ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் பெண் சாலை மறியல்

ஏரியூர் அருகே கணவர் சாவில் மர்மம் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் பெண் சாலை மறியலில் ஈடுபட்டார்.;

Update: 2021-08-17 16:30 GMT
ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள நெருப்பூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது46). விவசாயி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கணவன்-மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் ஆசைத்தம்பி திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கவிதா கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரை உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கவிதா ஏரியூர் போலீஸ் நிலைத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது கணவரின் சாவில் மர்மம் உள்ளது. இதனால் பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசைத்தம்பியின் உடலை கைப்பற்றி, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று கவிதா, தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்தும், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் உறவினர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்