விழுப்புரத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி

விழுப்புரத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்கு எந்திரங்களை தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

Update: 2021-08-17 16:07 GMT
விழுப்புரம், 

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. இதையொட்டி உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் அந்தந்த மாவட்டங்களில் மும்முரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களை சரிபார்த்து அதனை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.

சரிபார்க்கும் பணி

இதற்காக விழுப்புரம் கிழக்கு புதுச்சேரியில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையை நேற்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா திறந்து பார்வையிட்டார்.
அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களான பேலட் யூனிட் 2,450 எந்திரங்களும், கண்ட்ரோல் யூனிட் 1,300 எந்திரங்களும் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டது. இப்பணி முடிந்ததும் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்னணு வாக்கு எந்திரங்களில் ஏதேனும் பழுதுகள் இருப்பின் அவை சரிசெய்யப்பட்டு உள்ளாட்சி தேர்தலின்போது பயன்படுத்தப்படும் என்று நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம், நகராட்சி மேலாளர் வசந்தி, நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், தேர்தல் எழுத்தர் துரை, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ராமதாஸ், பா.ஜ.க. நிர்வாகி ரகு, தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்