மீனவரை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சீர்காழி அருகே நடைபாதை தொடர்பான பிரச்சினையில் மீனவரை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனையும், அவரது தந்தைக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
நாகப்பட்டினம்:
சீர்காழி அருகே நடைபாதை தொடர்பான பிரச்சினையில் மீனவரை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனையும், அவரது தந்தைக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நடைபாதை பிரச்சினை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்பாராசு(வயது 65). மீனவர். இவரது வீட்டின் அருகே வீரமுத்து(40) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் இடையே நடைபாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதில் வீரமுத்து, நடைபாதையில் மரக்கட்டையை போட்டு ஆக்கிரமித்து இருந்தார்.
அரிவாளால் வெட்டிக்கொலை
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந் தேதி அப்பாராசு தனது மகன் ரஜினி திருமணத்துக்காக நடைபாதையில் இருந்த மரக்கட்டைகளை அப்புறப்படுத்தினார். அப்போது அங்கு வந்த வீரமுத்து மற்றும் அவரது மகன் பத்மநாபன்(26) ஆகிய இருவரும் சேர்ந்து அப்பாராசுவிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த தகராறு முற்றவே வீரமுத்து மற்றும் பத்மநாபன் ஆகிய இருவரும் சேர்ந்து அப்பாராசுவை அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அப்பாராசுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பாராசுவின் மற்றொரு மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பு அளித்தார்.
அவர் தனது தீர்ப்பில், அப்பாராசுவை அரிவாளால் வெட்டி கொலை செய்த பத்மநாபனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் வீரமுத்துவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அப்பாராசுவின் மனைவி ஆரியமாலாவிற்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.