குழந்தை பிறந்த 11 நாட்களுக்கு பிறகு தாய் மரணம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்த 11 நாட்களுக்கு பிறகு தாய் மரணம் அடைந்ததால் அவரது உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்த 11 நாட்களுக்கு பிறகு தாய் மரணம் அடைந்ததால் அவரது உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் குழந்தை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்கொடியன். இவரது மனைவி நந்தினி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நந்தினி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 6-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. நந்தினி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சக்கரைநோய் உள்ளதால் உடல்நிலை சரியில்லை என்று கூறி டாக்டர்கள் மருத்துவமனையிலேயே தங்க வைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று நந்தினிக்கு மீண்டும் உடல் நிலை மோசமானதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திடீர் போராட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 6-ந் தேதி நந்தினிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளதால் இங்கே தங்கி மருத்துவம் பார்த்து செல்ல வேண்டும் என டாக்டர்கள் கூறினார்கள்.
அதன் பிறகு நந்தினி தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தார்.. திடீரென நந்தினிக்கு உடல்நிலை மோசமானதாக கூறி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர்கள் மூச்சுத்திணறல் வந்து நந்தினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்றனர்.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி டாக்டர்கள் வட்டாரத்தில் கூறுகையில், நந்தினிக்கு உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, ரமேஷ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் நந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.