சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டு சிறை
பெண்ணை அரிவாளால் வெட்டிய சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.;
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 36). இவர், சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு, அதே ஊரில் உள்ள ஒரு தோட்டத்தில் 58 வயது பெண் வாழை இலை அறுக்க சென்றார். அப்போது சின்னச்சாமி, அந்த பெண்ணை வழிமறித்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சின்னச்சாமி, அங்கு கிடந்த அரிவாளால் அந்த பெண்ணை வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில், காயம் அடைந்த பெண் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமியை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு கூறினார்.
பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற குற்றத்துக்கு, சின்னச்சாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.
இதேபோல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சின்னச்சாமியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
---