தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு
திமிரி, ஆற்காடு ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சிகளில் போடப்பட்டு வரும் சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களையும் பார்வையிட்டார்.
ராணிப்பேட்டை
திமிரி, ஆற்காடு ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சிகளில் போடப்பட்டு வரும் சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களையும் பார்வையிட்டார்.
கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம், பாளையம் ஊராட்சியில் பாளையம் முதல் கலைஞர் நகர் கிராமம் வரை சுமார் 1.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.38 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியினை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டார்.
அங்கு ஓர் அடுக்கு ஜல்லி கொண்டு அமைக்கப்பட்டுள்ள சாலையில், ஆங்காங்கே ஜல்லி கற்கள் வெளியே பெயர்ந்து வந்துள்ளதை பார்வையிட்டு, அதனை சரி செய்ய உத்தரவிட்டார்.
மேலும் தண்ணீர் செல்வதற்கு சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சாலையில் சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மேடு பள்ளம் உள்ளதை சரி செய்யவும் உத்தரவிட்டார்.
கீழம்பாடி ஊராட்சி
அதேபோல், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், கீழம்பாடி ஊராட்சியில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் தார் சாலையை மேம்படுத்தும் பணி ரூ.23 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தார் சாலையை ஒட்டி வலது மற்றும் இடது புறங்களில் சுமார் 2.5 அடி அளவிற்கு மண், கல் மண் கொட்டி சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சரியான அளவில் இல்லை. அதனை சரி செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
அலையாத்தி புறம் முதல் கலைஞர் நகர் வரை 1.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.41 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஓரடுக்கு ஜல்லியுடன் கூடிய தார் சாலை போடும் பணிகள் நடை பெறுவதையும் கலெக்டர் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.
வாக்கு எண்ணும் மையங்கள்
தொடர்ந்து திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையமான கலவை ஜி.பி. நகரில் உள்ள ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை பார்வையிட்டார்.
இங்கு காவல்துறையினருடன் இணைந்து அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதேபோல் ஆற்காடு வட்டத்திற்குட்பட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ஆற்காடு நகராட்சியில் உள்ள ஜி.வி.சி. கல்வியியல் கல்லூரியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.