பெட்ரோல், டீசல் மானியம் வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
பெட்ரோல்- டீசல் மானியம் வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரடாச்சேரி,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறன் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க ஒன்றிய பேரவை கூட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரா, மாவட்ட செயலாளர் கெரக்கோரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ெரயில் பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய 2 ெரயில் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ெரயிலின் முன்புறம் ஒரு பெட்டியும் பின்புறம் மற்றொரு பெட்டியும் இருக்கும். தற்போது கொரோனா நோய் தொற்று ஊரடங்கிற்குப்பிறகு செயல்படும் ரெயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
எனவே மீண்டும் அனைத்து ெரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ெரயில் பெட்டிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ெரயில்வே பிளாட்பார டிக்கெட் விலையை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். குறைந்த வருவாய் பெறும் இவர்கள் கூடுதல் விலை கொடுத்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வாங்க முடிவதில்லை. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல்- டீசல் வழங்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.1,500- ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தவழ்ந்து வரும் நிலையிலான மாற்றுத்திறனாளிகளுக்கும், மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.