அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் பணி வழங்கக் கோரி தர்ணா

அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் பணி வழங்கக்கோரி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2021-08-17 11:57 GMT
திருவண்ணாமலை

அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் பணி வழங்கக்கோரி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கத் தலைவர் மலர்வண்ணன் தலைமையிலான துப்புரவு பணியாளர்கள் இன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் தலித் விடுதலை இயக்க மாநில பொது ெசயலாளர் கதிர்காமன் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், ‘‘திருவண்ணாமலை நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக 250-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்தோம். கடந்த 14-ந் தேதியுடன் துப்புரவு பணிக்கான தனியார் ஒப்பந்தம் நிறைவடைந்தது. 

இதையடுத்து நகராட்சி நிர்வாகம் 150 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் பணி வழங்க வேண்டும். 

மேலும் துப்புரவு பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். பணத்தை நகராட்சி நிர்வாகம் பெற்று தர வேண்டும்’’ என்றனர்.

நேரில் வர வேண்டும்

அவர்களுடன் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  நகராட்சி ஆணையர் நேரில் வந்தால் தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர். 

பின்னர் நகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை (நாளை) உங்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்