வேலூர் புதிய மீன்மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை
வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட மீன்கள், கெட்டுப்போன மீன்கள் என 42 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர்
வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட மீன்கள், கெட்டுப்போன மீன்கள் என 42 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
வேலூர் பகுதியில் விற்கப்படும் மீன்களில் சில மீன்கள் கெட்டுப்போன மீன்களாகவும், சில கடைகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும், மீன்வளத்துறை அலுவலர்களும் இணைந்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டனர்.
அதன்படி உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தவேல், ரவிச்சந்திரன் கொண்ட குழுவினரும், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினரும், இவர்களுடன் மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் முருகன் ஆகியோரும் இணைந்து இன்று வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
42 கிலோ பறிமுதல்
அப்போது தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, தடை செய்யப்பட்ட மீன்கள் ஏதேனும் விற்பனைக்கு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வைத்திருந்ததனர். இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் 40 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஒரு கடையில் இருந்த 2 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனர்.
மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கான கெமிக்கல் ஏதேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய மாதிரியும் சேகரித்தனர்.
மீன்மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தரமான மீன்களை விற்பனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட மீன்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் விற்பனைக்கு கொண்டு வரக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.