வாய்மேடு பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள திரண்ட பொதுமக்கள்

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என தகவல் பரவியதால் வாய்மேடு பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.

Update: 2021-08-17 10:42 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தலைமை தாங்கினார். கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என அறிவித்ததாக தகவல் பரவியதால் இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பொதுமக்கள் திரண்டதால் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.

இதேபோல பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு சென்றனர்.

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமைதாங்கினார். இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது இதில் சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், தமிழ்மணி, விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்