தங்கையின் திருமண நாளை பட்டாசு வெடித்து கொண்டாடிய அண்ணன் சாவு

தங்கையின் திருமண நாளை, பட்டாசு வெடித்து கொண்டாடிய அண்ணன், 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

Update: 2021-08-17 05:19 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லி ராஜா அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள் (வயது 39). கேட்டரிங் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவருடைய தங்கைக்கு திருமண நாள் ஆகும்.

அதனை கொண்டாட நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி வைத்தி நகர் பகுதியில் உள்ள தங்கையின் வீட்டுக்கு சென்ற வெங்கடேசபெருமாள், பின்னர் வீட்டின் 2-வது மாடிக்கு சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டியின் மீது நின்று பட்டாசு வெடித்தார்.

அப்போது அவர், எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து கால் தவறி, வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து விட்டார்.

உயிரிழந்தார்

பட்டாசு வெடிக்க மாடிக்கு சென்ற அவர் நீண்டநேரம் ஆகியும் கீழே இறங்கி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் இல்லை. பின்னர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, வீட்டின் பின் பகுதியில் இருந்த கழிவுநீர் கால்வாயில் இருந்து செல்போன் ஒலிக்கும் சத்தம் வந்தது.

அங்கு சென்று பார்த்தபோது, கழிவுநீர் கால்வாய்க்குள் வெங்கடேசபெருமாள் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்