குடும்ப தகராறில் மைத்துனர் குத்திக்கொலை
ஓசூரில் குடும்ப தகராறில் மைத்துனர் குத்திக்கொலை செய்யப்பட்டார். ஆட்டோ டிரைவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஓசூர், ஆக.17-
ஓசூரில் குடும்ப தகராறில் மைத்துனர் குத்திக்கொலை செய்யப்பட்டார். ஆட்டோ டிரைவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பயங்கர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆட்டோ டிரைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டை நில மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாதேஷ் என்கிற மாதா (வயது 29), இவருடைய மனைவி சோனியா (25). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் வேதனை அடைந்த சோனியா, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
கத்திக்குத்து
இதனை அறிந்த பழ வியாபாரியான சோனியாவின் அண்ணன் விக்கி (31) தனது மாப்பிள்ளை மாதேசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்கையை அவருடன் சேர்த்து வைக்க முயற்சி செய்தார். அதற்காக மாதேஷ் வீட்டுக்கு விக்கி சென்றார். அங்கு பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாதேஷ், கத்தியால் விக்கியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே விக்கி துடித்து இறந்தார்.
கொலை குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசர்ா விரைந்து வந்தனர். விக்கி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மாதேஷை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூரில் குடும்ப தகராறில் மைத்துனரை ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.