ராசிபுரம் அருகே கிணற்றில் தொழிலாளி பிணம் மீட்பு போலீசார் விசாரணை
ராசிபுரம் அருகே கிணற்றில் தொழிலாளி பிணம் மீட்பு போலீசார் விசாரணை
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே விவசாய கிணற்றில் பந்தல் தொழிலாளி உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் பிணம்
ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் கிராமத்திற்கு உட்பட்டது மயில்காடு. அங்கு ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் 20 அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று மாலையில் அங்கு சென்ற ராஜேந்திரன் கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பச்சமுத்து, அன்பில் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) சேட்டு மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் அங்கு சென்றார். இதையடுத்து தீயணைப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்
விசாரணை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி ராஜசேகர் (வயது 44) என்பது தெரியவந்தது. ராஜசேகர் இறந்த கிணற்றின் அருகே அவரது மாமியாருக்கு சொந்தமான வீடு உள்ளது. கடந்த 12-ந் தேதி ராஜசேகர் அங்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அன்றைய தினத்திலிருந்து அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில்தான் ராஜசேகரின் உடல் கிணற்றில் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜசேகர் மனைவி யசோதா (35) மற்றும் உறவினர்கள் அங்கு சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 1½ மாதமாக ராஜசேகர் மனநலம் இன்றி இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் ராஜசேகரன் சாவு குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.