தொழிலாளியின் வீட்டை உடைத்த காட்டுயானைகள்

தொழிலாளியின் வீட்டை உடைத்த காட்டுயானைகள்

Update: 2021-08-16 21:57 GMT
கூடலூர்

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் புகுந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் நாடுகாணி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆமைகுளம் பகுதியில் 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரது வீட்டை காட்டுயானைகள் முற்றுகையிட்டது.

இதைக்கண்ட மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் பின்பக்க வாசலை திறந்து கொண்டு வெளியே ஓடி தப்பித்தனர். தொடர்ந்து வீட்டின் முன்பக்க கதவு மற்றும் சுவரை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

தொடர்ந்து சேதமடைந்த வீட்டை வனத்துறையினர் பார்வையிட்டனர். அப்போது இழப்பீட்டுக்கான தொகை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதியளித்தனர்.

மேலும் செய்திகள்