வாடகை கட்டிடத்தில் இயங்கும் போலீஸ் நிலையம்

மஞ்சூரில் வாடகை கட்டிடத்தில் போலீஸ் நிலையம் இயங்குகிறது. அங்கு இட நெருக்கடியால் போலீசார் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2021-08-16 21:57 GMT
மஞ்சூர்

மஞ்சூரில் வாடகை கட்டிடத்தில் போலீஸ் நிலையம் இயங்குகிறது. அங்கு இட நெருக்கடியால் போலீசார் அவதியடைந்து வருகின்றனர்.

வாடகை கட்டிடத்தில்...

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவின் தலைமையிடமாக விளங்கி வருவது, மஞ்சூர் நகரம் ஆகும். இங்கு மஞ்சூர்-ஊட்டி பிரதான சாலையோரத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் சுமார் 60 ஆண்டுகளாக மின்வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை அடிப்படையிலேயே போலீஸ் நிலையம் செயல்படுகிறது. அதில் சிறு, சிறு அறைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. 

ஒரு அறையில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் கைதிகள் அடைக்கப்படுகின்றனர். மற்ற அறைகளில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இருக்கைகளுடன் ஆவண பாதுகாப்பு உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இட நெருக்கடி

தற்போது மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் போலீஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் மஞ்சூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ளது. இதனால் தினமும் பல்வேறு வழக்குகளுக்காக ஏராளமானோர்  வந்து செல்கின்றனர். இதனால் இடநெருக்கடி மேலும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போலீசாரும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கட்டுமான பணி

மஞ்சூர் போலீசார் கூறியதாவது:- அனைத்து அடிப்படை வசதிகளுடன் மஞ்சூரில் போலீஸ் நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டி தரப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் மஞ்சூர் பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. பின்னர் குந்தா வருவாய்துறையினரால் இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. 

டந்த வாரம் மஞ்சூருக்கு வந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் நிலையம் கட்டுவது தொடர்பாக போலீசாருடன் ஆய்வு நடத்தினார். இதனால் விரைவில் போலீஸ் நிலைய கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்