டயர் வெடித்ததில் பால்வேன்- லாரி மீது கார் மோதல்; தம்பதி உள்பட 5 பேர் படுகாயம்

குன்னம் அருகே டயர் வெடித்ததில் பால்வேன்- லாரி மீது கார் மோதியதில் தம்பதி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-16 21:55 GMT
குன்னம்:

காரில் சென்றனர்
சென்னை திருமழிசை பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ்(வயது 50). இவரது மனைவி உமாதேவி(40), மகள் நித்யாஸ்ரீ(21) மற்றும் உறவினர் மாணிக்கம்(65). இவர்கள் 4 பேரும் அரியலூருக்கு காரில் வந்து விட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை டிைரவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சரவணன்(41) ஓட்டினார்.
பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் குன்னத்தை அடுத்த மேலமாத்தூர் அருகே வந்தபோது திடீரென காரின் முன்பக்க வலதுபுற டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற பால் வேனின் பின்புறம் மோதியது. மேலும் நிற்காமல் சென்று எதிரே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
5 பேர் படுகாயம்
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயமடைந்து, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தினால் பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலமாத்தூரில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்