சேலத்தில் பயங்கரம்: லாரியை ஏற்றி வாலிபர் கொடூரக்கொலை

சேலத்தில் குடும்ப தகராறு காரணமாக லாரியை ஏற்றி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-08-16 21:30 GMT
சூரமங்கலம்
 இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
லாரி டிரைவர்
சேலம் சோளம்பள்ளம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகன் சுப்பிரமணி (வயது 34), லாரி டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜீவிதாவுக்கும் (25) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஜீவிதாவிற்கும், சுப்பிரமணிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து ஜீவிதா பக்கத்து தெருவில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் சுப்பிரமணி, மது அருந்திவிட்டு அதே பகுதியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவி ஜீவிதாவிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்து உள்ளார்.
வாக்குவாதம்
அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜீவிதாவின் தந்தை குப்பன் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார். மேலும் அங்கு வந்த ஜீவிதாவின் அத்தை மகன் ஜீவானந்தமும் (24) அவர்களை சமாதானம் செய்தார்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத சுப்பிரமணி அவர்களை பார்த்து, ‘உங்களை கொல்லாமல் விடமாட்டேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து பக்கத்து தெருவில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். 
பின்னர் இரவு 10 மணியளவில் வீட்டின் முன்பு அவர் நிறுத்தி வைத்திருந்த கூரியர் தபால் லாரியை ஓட்டிக்கொண்டு மாமனார் குப்பன் வீடு உள்ள தெருவில் வேகமாக வந்தார். 
வாலிபர் சாவு
அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த குப்பன் மீது அவர் லாரியை ஏற்றுவது போல் வேகமாக ஓட்டிவந்தார். இதைப் பார்த்த உறவினர் ஜீவானந்தம் உடனடியாக குப்பனை வீட்டுக்குள் இழுத்து சென்று காப்பாற்ற முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத சுப்பிரமணி ஆத்திரத்தில் வீட்டை நோக்கி லாரியை திருப்பி ஓட்டினார். இதில் வீட்டின் சுவர் பகுதியில் மோதி லாரி நின்றது. 
அதே நேரத்தில் குப்பனை காப்பாற்றிய ஜீவானந்தம் லாரி மோதி சுவரின் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜீவானந்தத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதனிடையே லாரியை ஏற்றி வாலிபரை கொலை செய்த சுப்பிரமணியை சம்பவ இடத்தின் அருகே நின்றவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
குடும்ப தகராறு காரணமாக வாலிபர் மீது டிரைவர் லாரியை ஏற்றி கொலை செய்த சம்பவம் சேலம் சோளம்பள்ளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்