பனமரத்துப்பட்டி அருகே பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு மகனை கொல்ல முயன்ற தந்தை கைது வீட்டுக்குள் அடைத்து வைத்ததால் ஆத்திரம்

பனமரத்துப்பட்டி அருகே வீட்டுக்குள் அடைத்து வைத்ததால் குடிபோதையில் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-16 21:30 GMT
பனமரத்துப்பட்டி, 
தகராறு
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி ஊராட்சி அடிமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது47), கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அஜித்குமார் (23). இவர்கள் இருவரும் கல் டிப்போவில் கூலி வேலை செய்து வருகின்றனர். 
இந்தநிலையில் தந்தை-மகன் இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். மேலும் அன்பழகன் குடிபோதையில் இருந்ததால் அஜித்குமாரும், அவரது தாயார் மணிமேகலையும் சேர்ந்து அவரை வீட்டினுள் அடைத்து கதவை வெளிப்பக்கமாக பூட்டி உள்ளனர். 
துப்பாக்கியால் சுட்டார்
கதவை திறக்க சொல்லி அன்பழகன் சத்தம் போட்டுள்ளார். ஆனால் மணிமேகலையும், அஜித்குமாரும் கதவை திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ஜன்னல் வழியாக அஜித்குமாரை நோக்கி சுட்டுள்ளார். அன்பழகன் சுடுவதை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் துப்பாக்கி குண்டு அவர்கள் மீது படவில்லை. 
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது அன்பழகன் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
கைது
இதுபற்றி தகவல் அறிந்ததும் சேலம் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அன்பழகன் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கியை அனுமதி இன்றி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அன்பழகனை கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். 
மேலும் இந்த சம்பவம் குறித்து அன்பழகனின் மனைவி மணிமேகலை அளித்த புகாரின் பேரில் பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
வீட்டுக்குள் அடைத்து வைத்ததால் குடிபோதையில் மகனை நாட்டு துப்பாக்கியால் தந்தையே சுட்டு கொல்ல முயன்ற சம்பவம் பனமரத்துப்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்