வீடு புகுந்து போலீசார் எடுத்து சென்ற 7 பவுன் சங்கிலியை மீட்டு தரவேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்
வீடு புகுந்து போலீசார் எடுத்து சென்ற 7 பவுன் சங்கிலியை மீட்டு தரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு கொடுத்தார்.
ஈரோடு
வீடு புகுந்து போலீசார் எடுத்து சென்ற 7 பவுன் சங்கிலியை மீட்டு தரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு கொடுத்தார்.
அடிப்படை வசதி
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்போது நடைபெறவில்லை. எனினும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை வழங்கும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை போட்டு வருகிறார்கள்.
அதன்படி நேற்று ஊராளி மக்கள் சங்கத்தின் தலைவர் மாதேவன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
சத்தியமங்கலம் அருகே உள்ள குத்தியாலத்தூர், குன்றி, குத்தம்பாளையம், மாக்கம்பாளையம், திங்களூர் ஆகிய கிராமங்களில் ஊராளி பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, மயானம், குழந்தைகள் நல மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு பட்டாவும் வழங்க வேண்டும். அதேபோல், கடம்பூர் மலைப்பகுதியில் கெம்பநாயக்கன்பாளையம் முதல் கடம்பூர் வரை உள்ள வன சாலையையும், மாக்கம்பாளையம் வன சாலையையும் தார் ரோடாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இலவச வீடு
அம்மாபேட்டை பாரதியார் வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சீனிவாசன் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘நானும், எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வாய்பேச முடியாதவர்கள். நான் மட்டும் கூலி வேலை செய்வதால் வாழ்க்கை நடத்துவதில் மிகுந்த சிரமமாக உள்ளது. எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. வாடகை வீடு வழங்கவும் தயங்குகின்றனர். எனவே, எங்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும். எனது குழந்தைகளின் வாழ்வாதாரத்தை காக்க தேவையான உதவிகள் செய்து தர வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
நம்பியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ஊசி, பாசி விற்பனை செய்பவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்கள். கரட்டுப்பாளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீடோ, நிலமோ எதுவும் இல்லை. எனவே, எங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
7 பவுன் சங்கிலி
ஈரோடு எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த நிஷாந்தி (வயது 32) என்பவர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருந்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-
நான், எனது கணவர், 2 பெண் குழந்தையுடன் வசித்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் 4 பேர், என்னுடைய வீட்டுக்கு வந்து, எனது கணவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது தொடர்பாக விசாரிக்க வந்தனர். தூங்கி கொண்டிருந்த எனது கணவரை எழுப்பி வருவதற்குள், நான் நாற்காலியில் வைத்திருந்த 7 பவுன் சங்கிலியை போலீசார் எடுத்து வைத்து கொண்டனர். அத்துடன் விசாரணை என்ற பெயரில் எனது கணவரை அழைத்து சென்றுவிட்டனர்.
எனது நகையை திருடி சென்றது தொடர்பாக, வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோர்ட்டு மூலமும் மனுத்தாக்கல் செய்தேன். தற்போது கலெக்டரிடம் முறையிட்டுள்ளேன். எனது கணவர் பெயரில் சில வழக்குகள் உள்ளதால், அதை காரணம் கூறி, போலீசார் எனது மனுவை விசாரிக்க மறுக்கின்றனர். எனது வீட்டில் போலீசார் திருடிய 7 பவுன் சங்கிலியை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
அட்டவணைப்புதூர்
அட்டவணைப்புதூர் ஊராட்சியில் பணிதள பொறுப்பாளராக இருக்கும் ஜானகி என்பவர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். என்னுடைய கணவர் மாற்றுத்திறனாளி. எனக்கு ஒரு மகள் உள்ளார். என் வருமானத்தை நம்பி தான் என் குடும்பம் உள்ளது. நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த மாதம் தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தேன். இதனால் என் மீது கோபம் அடைந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், என்னை பணிதள பொறுப்பாளர் பணியிலிருந்து நீக்குமாறு பல அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். மேலும் அவர், அரசியல் ரீதியாக என்னை பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். எனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதால் எனது வேலை பாதுகாப்பினையும், குடும்பத்திற்கான பாதுகாப்பும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.