இந்திரா உணவகம் பெயர் மாற்றப்படாது; மந்திரி அசோக் உறுதி

இந்திரா உணவகத்தின் பெயர் மாற்றப்படாது என்று வருவாய்த்துறை மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-16 20:56 GMT
பெங்களூரு:

மந்திரி அசோக் தொடங்கி வைத்தார்

  பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் வீடு, வீடாக சென்று மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நேற்று வருவாய்த்துறை மந்திரி அசோக் தொடங்கி வைத்தார்.

  பின்னர் அவரிடம், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள இந்திரா உணவகத்தின் பெயரை மாற்றி, அன்னபூர்னேஷ்வரி என்று பெயரிடுவதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அரசு முடிவு செய்யவில்லை

  இந்திரா உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒவ்வொருவரும், அவர்களது கருத்துகளை கூறி வருகிறார்கள். இந்திரா உணவகத்தின் பெயரை மாற்றுவது குறித்து அரசு இதுவரை எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை. அதுதொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இந்திரா உணவகத்தின் பெயரை அரசு மாற்ற இருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை.

  இந்திரா உணவகத்தின் பெயரை மாற்றுவது குறித்து மந்திரிகளுடன் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. எம்.எல்.ஏ.க்களுடனும் விவாதிக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க இதற்கு முன்பு கிராமங்களை நோக்கி டாக்டர்களின் நடைபயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. தற்போது பெங்களூருவில் வீடு, வீடாக சென்று மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்