நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம், அறிவியல் முதுகெலும்பு; வெங்கையா நாயுடு பேச்சு
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம், அறிவியல் முதுகெலும்பு என்றும், இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:
வெங்கையா நாயுடு வருகை
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கர்நாடகத்தில் நேற்று முதல் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர், நேற்று காலையில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அங்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, கவர்னர் தாவா்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.
பின்னர் பெங்களூரு ஜக்கூரில் உள்ள ஜவர்கலால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின், கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
மனித சமுதாயத்திற்கு...
நாட்டில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட கல்வியை பெண்கள் அதிகஅளவில் கற்க வேண்டும். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு விஞ்ஞானியும் முனைப்புடன் செயல்பட வேண்டும். பருவநிலை மாற்றம், வேளாண்மை, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்க விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் தங்களது வழக்கமான சிந்தனைகளுக்கு, மாறுபட்டு சிந்திக்க வேண்டும்.
எந்த ஒரு ஆராய்ச்சியாக இருந்தாலும் சரி, அது கல்வியோ அல்லது தொழில் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, அந்த ஆராய்ச்சி மனித சமுதாயத்திற்கு பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும். ஜவர்கலால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையம் இதுவரை கண்டுபிடித்துள்ள 300 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. தனது சொந்த கண்டுபிடிப்புகளை மேம்படுத்தியும் உள்ளது.
65 சதவீதம் பெண்கள்
ஜவர்கலால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையம் பல்வேறு துறைகளை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை உயிரியல், கணக்கீட்டு உயிரியல், பொறியியல் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் புதிய துறைகளில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சி மையம் தனது தரத்தை உயர்த்தி கொண்டு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகின் தலை சிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றாக உயர வேண்டும்.
பல்கலைக்கழங்களில் 4-வது இடத்தை பெற்றுள்ளது. மாணவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பெண்களின் வளர்ச்சிக்கான நலல அறிகுறியாகும். பெண்களின் படிப்பை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் பதக்கம் பெறுவதில் 65 சதவீதம் பேர் பெண்கள். இது மற்றொரு மகிழ்ச்சியான விஷயமாகும்.
தொழில்நுட்பம் முதுகெலும்பு
விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது. அவர் ஆற்றல் மற்றும் சேமிப்பில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பன்னாட்டு விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அந்த பன்னாட்டு விருதை இத்தாலி அதிபரிடம் இருந்து சி.என்.ஆர்.ராவ் பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் இளம் விஞ்ஞானிகளை சி.என்.ஆர்.ராவ் ஈர்த்து வருகிறார்.
எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் தொழில் நுட்பம், அறிவியல் தான் முதுகெலும்பாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும். அதன்மூலம் சமூக சிக்கல்கள், பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அறிவியல் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக, தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.