பொதுமக்கள் சாலை மறியல்

ராஜபாளையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-08-16 19:41 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சாலை மறியல் 
ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கடம்பன்குளம், கம்மாபட்டி ஆகிய பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர், வாருகால், சாலை, பள்ளிக்கூட சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுத்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட கம்மாபட்டியிலிருந்து ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நோக்கி சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு 
அப்போது போலீசார் கம்மாப்பட்டி தெருவில் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன்,  துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்