மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;

Update: 2021-08-16 19:39 GMT
கரூர்,
மாட்டுவண்டி தொழிலாளர்கள்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். அதன்படி கரூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் அரசின் அனுமதியோடு மணல் அள்ளி உள்ளூர் கட்டுமான பணிக்கு அளித்து வந்தோம். 
மணல் குவாரி
தற்போது மணல் குவாரிகளை அரசு முடக்கியுள்ளதால் இதனை நம்பி வாழ்ந்து வந்த நாங்கள், எங்களது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதோடு மாடுகளை பராமரிக்கவும் பெரும் சிரமப்பட்டு வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது அரசு உத்தரவாதம் அளித்தவாறு மணல் குவாரிகளை திறக்க தற்போது வரை எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை. இதேநிலை தொடர்ந்தால் தற்கொலைக்கு ஆளாகும் நிலையே எங்களுக்கு ஏற்படும். 
ஆகவே எங்களது வாழ்வாதாரம் காக்க கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் அரசு தீர்மானித்துள்ள குவாரிகளை திறந்து மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாயப்பட்டறை
தாளப்பட்டி ஊராட்சி, செங்காளிபாளையம் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- தாளப்பட்டி கிராமம் செய்யப்பகவுண்டன்புதூரில் இயங்கி வரும் சாயப்பட்டறை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. 
சாயக்கழிவுநீர் கலந்த நீரை பயன்படுத்தும் போது கால்நடைகளுக்கு தீராத வியாதிகளும் மற்றும் ஒருசில கால்நடைகள் இறந்தும் உள்ளன. மனிதர்களுக்கு தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். விவசாய நிலங்களும், விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகிய கிணறு போர்வெல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. செங்காளிபாளையம் ஊரில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு போகக்கூடிய சிக்கலான சூழ்நிலையில் உள்ளனர். இதேநிலைமை நீடித்தால் எங்கள் கிராமம் குடியிருக்க தகுதியற்ற கிராமமாக மாறிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோலார் மின்தகடு
கடவூர் தாலுகா, மத்தகிரி ஊராட்சி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மத்தகிரி ஊராட்சியில் சோலார் மின்தகடு அமைத்துக் கொண்டு இருப்பதால், எங்கள் பகுதியில் குடிநீர், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல் வளங்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 
எனவே சாலையோரம் மின்கம்பங்கள் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சோலார் நிறுவனம் இயங்குவதற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு இல்லாமல் அனுமதி வழங்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்