கடைகளில் பணம் வசூல் செய்தவர் கைது

உணவு பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து கடைகளில் பணம் வசூல் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-16 18:28 GMT
சிவகங்கை,

உணவு பாதுகாப்பு அதிகாரி போல் நடித்து கடைகளில் பணம் வசூல் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

பணம் வசூல்

சிவகங்கையை அடுத்த சாத்தரசன் கோட்டை பகுதியில் உள்ள கடைகளில் கடந்த 2 நாட்களாக 35 வயது மதிக்கத்தக்க டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி சோதனை செய்து குறைகள் உள்ளதாக கூறி அவர்களிடம் அபராதம் வசூல் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் அந்த ஆசாமி மீண்டும் சாத்தரசன்கோட்டை பகுதியில் ஏற்கனவே பணம் வசூலித்த கடைகளுக்கு மீண்டும் வந்து பணம் கேட்டுள்ளார். இதில் சந்தேகமடைந்த கடைக்காரர்கள் அவரைப்பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது அதுபோல் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் அந்த நபரை பிடித்து வைத்துக்கொண்டு சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சாத்தரசன்கோட்டைக்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

பரமக்குடியை சேர்ந்தவர்

அப்போது அவரது பெயர் சக்திவேல் (வயது 35) என்றும் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காடரந்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. இவர் ஏற்கனவே இது போல தேவகோட்டை, திருவேகம்பத்தூர், சிலுக்கபட்டி, காளையார்கோவில், தாயமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் பணம் வசூலித்துள்ளார்.
 மேலும் இவர் மீது பரமக்குடி, நையினார் கோவில் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்கு உள்ளது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிவகங்கை தாலுகா போலீசார் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தகவல் தரலாம்

 இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பிரபாவதி கூறியதாவது:-
 பொதுவாக கடைகளுக்கு சோதனைக்கு வரும் உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் அடையாள அட்டை இருக்கும். மேலும் அவர்களின் செயல்பாட்டில் சந்தேகம் இருந்தால் உடனடியாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தரலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்