தொழிலாளியை கல்லால் தாக்கியவர் கைது

மூலிமங்கலம் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-16 17:59 GMT
நொய்யல்,
முன்விரோதம்
மூலிமங்கலம் அருகே ஓனவாக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 47), கூலித்தொழிலாளி.  அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (23), டிரைவர். இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 
இந்தநிலையில் அண்ணாதுரையின் மகன் மலையப்பன் (11) அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மாரிமுத்து சிறுவனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கல்லால் தாக்குதல்
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை, மாரிமுத்துவிடம் எதற்காக எனது மகனை அடித்தாய் என்று கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து அண்ணாதுரையை கீழே தள்ளி அங்கு கிடந்த கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதில்  பலத்த காயமடைந்த அண்ணாதுரையை அப்பகுதி மக்கள் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
கைது
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்தவடிவேல் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கல்லால் தாக்கிய மாரிமுத்துவை கைது செய்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்