பாதிக்கப்பட்ட 64 பேருக்கு ரூ.60 லட்சம் நிவாரணம்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட 64 பேருக்கு ரூ.60 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று விழுப்புரம் கலெக்டர் கூறினார்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்ட விதிகளை பின்பற்றி உரிய நிவாரணம் சரியான முறையில் சென்றடைவதை கண்காணிக்க மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் 16 நிலுவை வழக்குகள் மீது சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுத்தார்.
நிவாரண தொகை
அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் இதுவரை காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட 33 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 64 பேருக்கு நிவாரண தொகையாக ரூ.60 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு கூடுதல் நிவாரணமாக 15 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் தலா ரூ.5 ஆயிரம் மற்றும் பஞ்சப்படியும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர மேற்கண்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 2 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியும், 2 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் நிலையில் அரசு பணியும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரகுகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிச்சாமி, இளங்கோவன், கணேசன், அருண் மற்றும் மாவட்ட விழிப்புணர்வு, கண்காணிப்புக்குழு அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.