கரடி கடித்து குதறியதில் தொழிலாளி படுகாயம்
வால்பாறையில் பட்டப்பகலில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தபோது தொழிலாளியை கரடி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
வால்பாறை
வால்பாறையில் பட்டப்பகலில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தபோது தொழிலாளியை கரடி கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேயிலை தோட்ட தொழிலாளி
மலைப்பிரதேசமான வால்பாறையில் ஏராளமான வனவிலங்கு கள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் தேயிலை தோட்டங்களுக்கு அருகே குடியிருப்புவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை கவர்க்கல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 57). இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளி யாக வேலை செய்து வருகிறார். அங்குள்ள 7-ம் நம்பர் எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். பிற தொழிலாளர்களும் அங்கு இருந்தனர்.
கரடி கடித்து குதறியது
அப்போது அங்குள்ள பாறை இடுக்கில் இருந்து ஒரு கரடி வெளியே வந்தது. பின்னர் அந்த கரடி சேகர் மீது பாய்ந்து தாக்கி யதுடன், அவரை கடித்து குதறியது. இதனால் அவர் அலறினார்.
உடனே அருகில் இருந்த தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்து கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு வீசி எறிந்து அந்த கரடியை துரத்தினார்கள்.
பின்னர் அவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சேகரை மீட்டு வாட்டர் பால்ஸ் எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வால்பாறை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 பேரை கரடி தாக்கி உள்ளது. வில்லோணி எஸ்டேட்டில் கரடி கடித்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கரடி தாக்குதலுக்கு வாலிபர் படுகாயம் அடைந்தார். தற்போது சேகரையும் கரடி தாக்கி உள்ளது.
பொதுமக்கள் பீதி
வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலும் கரடி நடமாடி வருவதால், பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.