பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் கைது
ஆனைமலை அருகே மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பதாக 3 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய், அதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பதாக 3 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய், அதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் காரணமாக நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தம்மம்பதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் சேத்துமடை அண்ணா நகரை சேர்ந்த சரோஜினி (20) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நிவன்யா ஸ்ரீ (3) என்கிற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி குழந்தை திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததாக கூறி சரோஜினி அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்களிடம் கூறினார்.
குழந்தை சாவு
இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் அந்த குழந்தையை வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் கள், இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் அந்த குழந்தையின் பிறப்பு உறுப்பில் வீக்கம் இருந்ததால் டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக மரணம்
குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவியது. இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தம்மம்பதிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து அவர் குழந்தையின் தாய் சரோஜினிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலை கூறினார். பின்னர் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் விசாரணை
மேலும் சரோஜினியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு பதிலையே சொல்லி வந்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரின் செல்போனை போலீசார் வாங்கி ஆய்வு செய்தனர். அதில் அவர் சின்ன பொம்மன் என்பவரிடம் தொடர்ந்து பலமுறை பேசி இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.
சரண் அடைந்தார்
இந்த நிலையில் உயிரிழந்த அந்த குழந்தை கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தையின் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு இருப்பதற்கான அடையாளம் இருந்தது. இந்த விஷயம் சரோஜினிக்கு தெரியவந்தது.
எனவே போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த அவர், ஆனைமலை தெற்கு கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அவர் சென்றார். பின்னர் அங்கு இருந்த கிராம நிர்வாக அதிகாரி சம்பத்குமாரிடம் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்றுவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.
தாய்-கள்ளக்காதலன் கைது
இதையடுத்து அவர் சரோஜினியை ஆனைமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது, சின்ன பொம்மன் (24) என்பவருக்கும், சரோஜினிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.
எனவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சரோஜினி, தான் பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல் நிவன்யா ஸ்ரீயை கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் சின்ன பொம்மன் என்பவரையும் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
அதுபோன்று சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தது கொலை வழக்கமாக மாற்றப்பட்டது. பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.ஆனைமலை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாயே கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.