கள்ளக்காதலனை திருமணம் செய்யும் ஆசையில் குழந்தையை கொன்றேன்

கள்ளக்காதலனை திருமணம் செய்யும் ஆசையில் குழந்தையை கொன்றேன் என்று கைதான தாய் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2021-08-16 17:24 GMT
கோவை

கள்ளக்காதலனை திருமணம் செய்யும் ஆசையில் குழந்தையை கொன்றேன் என்று கைதான தாய் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார். 

குடித்துவிட்டு தகராறு 

ஆனைமலை அருகே 3 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய் சரோஜினியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- 

மணிகண்டனை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். வாழ்க்கை மகிழ்ச்சியை தொடங்கியதால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் கணவர் குடித்துவிட்டு வருவார். பின்னர் என்னிடம் தகராறு செய்வார். 

அவர் தினமும் இதுபோன்று செய்து வந்ததால் எனக்கு மணிகண்டன் (கணவர்) மீது வெறுப்பு ஏற்பட்டது. இதனால் நான் கோபித்துக் கொண்டு சேத்துமடையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன். அங்கிருந்து கூலி வேலைக்கு சென்றேன்.

அடிக்கடி உல்லாசம் 

அப்போது அதேப்பகுதியை சேர்ந்த சின்ன பொம்மனிடம் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் நன்றாக பேசினார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். 

இந்த நிலையில் எனது கணவர் மற்றும் உறவினர்கள் வந்து என்னை சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் வீட்டில் யாரும் இல்லாதபோது சின்ன பொம்மன் இங்கு வந்து என்னை பார்த்துவிட்டு செல்வார். 

குழந்தை இடையூறு 

இந்த விஷயம் எனது கணவர் மற்றும் எனது பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் என்னை கண்டித்தனர். சின்ன பொம்மனுக்கு திருமணம் ஆனாலும் அவருடைய மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனவே அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினேன். 

அதற்கு அவர், நமது திருமணத்துக்கு உனது குழந்தை இடை யூறாக இருக்கிறது. எனவே அந்த குழந்தையை கொன்றுவிட்டு வா, உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன். நாம் இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியூருக்கு சென்று சந்தோஷமாக வாழலாம் என்று கூறினார். 

கழுத்தை நெரித்து கொன்றேன் 

எனவே குழந்தை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். கடந்த 14-ந் தேதி வழக்கம் போல் கணவர் வேலைக்கு சென்று விட்டார். மாமனார், மாமியார் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது நான் குழந்தையை தூங்க வைப்பதாக கூறி அழைத்து சென்று தூங்க வைத்தேன்.

குழந்தை சிறிது நேரத்தில் தூங்கியது. அப்போது எனது கள்ளக்காதலனை திருமணம் செய்யும் ஆசையில் மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். நான் கொலை செய்ததை மறைப்பதற்காக குழந்தை மயங்கி கிடப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினேன். 

ஆனால் போலீசார் என்னிடம் துருவி துருவி விசாரணை செய்தனர். அப்போது என் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே எப்படியும் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து சரண் அடைந்தேன். 

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்