புதுச்சேரியில் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை

புதுச்சேரியில் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Update: 2021-08-16 17:09 GMT
புதுச்சேரி, ஆக-
புதுச்சேரியில் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
தியாகிகள் கவுரவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுவை தாவரவியல் பூங்காவில் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. தியாகிகளை கவுரவித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, இனிப்பு வழங்கினார். அனில்பால் கென்னடி எம்.எல்.ஏ. முன்னிலை வைத்தார். 
விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் வினயராஜ், வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதிய வேலைவாய்ப்புகள்
தியாகிகளால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. அவர்களை கவுரவிப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். மாநில வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம். 
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது நமது கடமை. புதிதாக தொழிற்சாலைகளை கொண்டுவருவதும் நமது கடமை. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். படித்த இளைஞர்கள் வேலையின்றி சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
6 ஆயிரம் விண்ணப்பங்கள்
 தற்போது விவசாயம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே விவசாயிகளை உற்சாகப்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்படும். விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
முதியோர், ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் ஓய்வூதியத்திற்கு மேலும் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்