இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு;

Update: 2021-08-16 16:24 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் திருப்பூர் மாநகரில் உள்ள ஆடு, கோழி, மீன் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அவினாசி ரோடு, காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளில் 41 இறைச்சிக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் 12 இறைச்சி கடைகளில், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்தி, அரிவாள், இறைச்சி தொங்கவிட பயன்படுத்தும் கொக்கி மற்றும் கயிறு ஆகியவை சுகாதாரமற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது. அந்த கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆடு, கோழி போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் ஆடுவதை கூடங்களில் வெட்டி பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும். இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் பலகைகள், கத்தி, அரிவாள் போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும். விற்பனை நிலையத்தில் சேகரமாகும் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இறைச்சியை கையாளும் கடைக்காரர்கள், தன் சுத்தம் பேண வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் இறைச்சியை பார்சல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின்போது உரிமச்சான்று, பதிவுச்சான்று காலாவதியான மற்றும் சான்று இல்லாத 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து இறைச்சி கடைகளும் உரிமம், பதிவு சான்று பெற அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்