கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை உயருமா என்று உடுமலை பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை உயருமா என்று உடுமலை பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2021-08-16 16:05 GMT
போடிப்பட்டி, ஆக.17-
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி காய்கறிகள் விலை உயருமா? என்று உடுமலை பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் விற்பனை
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் உடுமலை சந்தையிலுள்ள கமிஷன் மண்டிகள் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதுதவிர உடுமலை பகுதியில் விளையும் காய்கறிகளில் பெருமளவு கேரள மாநிலத்துக்குக்கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டு முழுவதும் கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டாலும் ஓணம் பண்டிகையின் போது அதிக அளவில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுவது வழக்கமாகும். இதனால் இந்த சமயத்தில் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் ஓணம் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காய்கறிகள் விலை பெரிய அளவில் உயராதது விவசாயிகளுக்கு ஏமாற்றமளித்துள்ளது. விலை உயருமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
10 நாட்கள் பண்டிகை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கேரள மக்களின் மிக முக்கிய பண்டிகையாக ஓணம் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் 10-ம் நாளான திருவோணம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தற்போது அங்கு கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது கேரள மக்களுக்கு எந்த அளவுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. அதே அளவுக்கு நமது பகுதி விவசாயிகளுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது என்று சொல்லலாம். ஏனென்றால் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி அதிக அளவில் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதால் நல்ல விலை கிடைத்து வந்தது. 
எனவே ஓணம் பண்டிகைக்கு அறுவடை செய்யும் வகையில் பலரும் சாகுபடிப்பணிகளைத்திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர். ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரையில் காய்கறிகளுக்கு பெரிய விலை ஏற்றம் இல்லை. வரும் சனிக்கிழமை திருவோணம் கொண்டாடப்படும் நிலையில் சிறிதளவாவது விலை ஏற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்