கோவையில் மக்கள் ஆசி யாத்திரையை தொடங்கினார் மத்திய மந்திரி எல்முருகன்

கோவையில் மக்கள் ஆசி யாத்திரையை தொடங்கினார் மத்திய மந்திரி எல்முருகன்

Update: 2021-08-16 15:11 GMT
கோவையில் மக்கள் ஆசி யாத்திரையை தொடங்கினார் மத்திய மந்திரி எல்.முருகன்
கோவை
கோவையில், மக்கள் ஆசி யாத்திரை தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக விமானம் மூலம் கோவை வந்த மத்திய மந்திரி எல்.முருகனுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் காரில் கோவை டவுன்ஹாலில் உள்ள கோனியம்ன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்ன் அவர், கோவை பூமார்க்கெட் அருகே உள்ள காமராஜர்புரத்துக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் யாத்திரையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் மூதாட்டி உள்பட பலரிடம் ஆசி பெற்றார். ஒரு மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கினர்.
விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசும்போது கூறியதாவது

அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்த என்னை பிரதமர் நரேந்திரமோடி இணை மந்திரியாக பதவியேற்கச்செய்து அழகு பார்த்துள்ளார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த என்னை மாநில தலைவராக்கியது பாரதீய ஜனதா. தமிழகத்தில் எந்த கட்சியும் இதனை செய்ததில்லை.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, எங்களை அறிமுகம் செய்ய இருந்தார். ஆனால் காங்கிரஸ் தி.மு.க.கம்யூனிஸ்டு கட்சியினர் அமளியில் ஈடுபட்டு அதனை தடுத்துவிட்டனர். ஏழை எளிய மக்களுக்கு வீடுகட்டும் திட்டத்தையும், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டும் திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றியது.

8 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவியால் 2014 ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை. வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக நீதியை போற்றுகிறவராக பிரதமர் இருக்கிறார். மத்திய மந்திரிசபையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 பேர், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 28 பேர் மந்திரிகளாக உள்ளனர். மத்திய பாரதீய ஜனதா அரசு நலத்திட்டங்களை செய்துள்ளதால் மக்களிடம் ஆசியை பெறுவதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

மக்கள் ஆசி யாத்திரை தொடக்கவிழாவில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மேலிட பார்வையாளர் சுதாகர்ரெட்டி துணைத்தலைவர் துரைசாமி, சி.பி.ராதாகிருஷ்ணன், நரேந்திரன், ஏ.பி.முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், ஜி.கே.எஸ்.செல்வகுமார், நடிகை குஷ்பு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

இதனை தொடர்ந்து மக்கள் ஆசி யாத்திரை பிரசார வாகனம் கோவையில் இருந்து  துடியலூர், மேட்டுப்பாளையம் வழியாக திருப்பூர் சென்றது. அப்போது எல்.முருகன் செல்லும் வழியில் மக்களிடம் குறைகள் கேட்டார். 

2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்திலும், 3-வது நாளான நாளை நாமக்கல், சேலம் மாவட்டத்திலும் மக்கள் ஆசி யாத்திரை நடைபெறுகிறது. மத்திய மந்திரி எல்.முருகனின் சொந்த கிராமமான கோனூர் மற்றும் ராசிபுரம், மல்லூர், சேலம் ஆகிய பகுதிகளுக்கும் இந்த யாத்திரை செல்கிறது. 
நாளை (புதன்கிழமை) இந்த யாத்திரை நிறைவுபெறுகிறது.

மேலும் செய்திகள்