குவாரியில் மண் எடுப்பதில் முறைகேடு 3 டிப்பர் லாரிகள், டிராக்டர் பறிமுதல்
குவாரியில் மண் எடுப்பதில் முறைகேடு நடந்தது தொடர்பாக 3 டிப்பர் லாரிகள், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள புலிக்குத்தி மலை அடிவார பகுதியில் தேனி மாவட்ட கனிம வளத்துறையிடம் அனுமதி பெற்ற தனியார் மண் குவாரி உள்ளது. இங்கு அனுமதி பெற்ற இடத்திற்கும் மேலாக முறைகேடாக மண் எடுப்பதாக நேற்று உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த டிப்பர் லாரி சங்கத்தினர் மண்குவாரியை முற்றுகையிட்டனர். மேலும் குவாரிக்கு முன்பு நின்று கொண்டு இருந்த 3 டிப்பர் லாரிகள், ஒரு டிராக்டரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதி பெறாத இடங்களில் மண் எடுப்பதாகவும், அரசு விதிமுறைகளை மீறி, மண் எடுக்கும் அனுமதி சீட்டை திருத்தம் செய்வதாகவும் கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி கனிமவளத்துறை ஆய்வாளர் பரமசிவம், உத்தமபாளையம் துணை தாசில்தார் முருகன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அனுமதி பெறாத இடத்தில் மண் எடுக்கப்பட்டதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட 3 டிப்பர் லாரிகள், ஒரு டிராக்டரை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மண் எடுக்க அனுமதி பெற்ற இடத்தை விட்டுவிட்டு அனுமதி பெறாத இடங்களில் மண் எடுத்தது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதேபோல் மற்ற இடங்களிலும் கனிமவளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்ட குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.