சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை வானகிரியில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானகிரியில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2021-08-16 14:15 GMT
திருவெண்காடு:-

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானகிரியில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவர் கிராமத்தில் நேற்று பழையாறு, தொடுவாய், நாயக்கர் குப்பம், மடத்து குப்பம், சின்னங்குடி, தாழம்பேட்டை, வெள்ளக்கோயில் உள்ளிட்ட 19 மீனவ கிராம பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தரங்கம்பாடி கிராம பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். வானகிரி கிராம பஞ்சாயத்தார்கள் வரவேற்றனர். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 
கடந்த 14-ந் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகு மீது விசைப்படகை கொண்டு மோதி, பைபர் படகை சேதப்படுத்திய செயலை கண்டிப்பது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் இழப்பீட்டை மீனவ கிராமங்கள் மூலம் வழங்குவது.

உண்ணாவிரதம்

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது வருகிற 20-ந் தேதிக்குள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும், சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக என்ஜின்களை 20-ந் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் 21-ந் தேதி முதல் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்துவது.
வானகிரி மீனவர் கிராமத்தில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் குவிக்கப்பட்டு உள்ள போலீசாரை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்