கொடிக்கம்பம் மாயம் பா.ஜ.க.வினர் சாலை மறியல் 19 பேர் கைது
கொடிக்கம்பம் மாயமானதால் கம்பத்தில் பா.ஜ.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம்:
கம்பத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தி சிலை அருகில் கொடிக்கம்பம் நட்டு, தேசியக்கொடி ஏற்றினார்கள். இந்தநிலையில் நேற்று காலை அந்த கொடிக்கம்பம் மாயமானது. இதனை அறிந்த பா.ஜ.க. வினர் நகர தலைவர் ஈஸ்வரன், செயலாளர் பழனிகுமார் தலைமையில் கோட்டை மைதானத்தில் ஒன்று கூடினர்.
இது குறித்து தகவலறிந்ததும் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் கோட்டை மைதானத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பா.ஜ.க.வினர் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க செல்வதாக போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார், புகார் மனுவை இங்கேயே கொடுங்கள், பெற்று கொள்கிறோம் என்றனர்.
சாலைமறியல்
இதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜ.க.வினர் கம்பம்-கூடலூர் பிரதான சாலை அரசமரம் பகுதியில் இருந்து காந்திசிலை வழியாக தெற்கு போலீஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் காந்தி சிலை அருகே அவர்களை வழிமறித்து, அனுமதி இன்றி ஊர்வலம் சென்றால் கைது செய்வோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து பா.ஜ.கவினர் காந்திசிலை அருகே சாலையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இந்தசமயத்தில் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
19 பேர் கைது
பின்னர் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 19 பேரை கைது செய்து கூடலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இது குறித்து தகவலறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி, பா.ஜ.க.வினர் அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு வந்தார். அவரிடம் கொடிக்கம்பத்தை காணவில்லை என பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.