அகவிலைப்படி முடக்கத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
அகவிலைப்படி முடக்கத்தை ரத்து செய்யக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர். அவர்களில் சிலர் ஆர்ப்பாட்டம் செய்து மனு கொடுத்தனர்.
அதன்படி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், அகவிலைப்படி முடக்கி வைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆதார் அட்டை வீச்சு
இதுபோல் எம்.பி.சி., டி.என்.டி. சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி சரியான புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும், 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும், சீர்மரபினர் மக்களுக்கு பழங்குடி சீர்மரபினர் (டி.என்.டி.) என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப் போவதாக கோஷங்கள் எழுப்பினர். அதற்கு ஏற்றார்போல் ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி எறிந்தனர். பின்னர் அவற்றை சேகரித்த போதிலும், அவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பான கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.
போடியில் 70 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.