மத்திய அரசு அதிகாரி மனைவியிடம் மோசடி: டெல்லி பெண் உள்பட மேலும் 3 பேர் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி மனைவியிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த வழக்கில், டெல்லி பெண் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-16 03:57 GMT
சென்னை,

சென்னை மந்தைவெளி, திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதாஸ்ரீதரன் (வயது 67). ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். இவரது கணவர் ஸ்ரீதரன் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் இறந்து விட்டார். அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கி விட்டார்.

இந்த விவரங்களை தெரிந்து கொண்ட டெல்லியில் செயல்பட்ட மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், சுதாவிடம் பேசினார்கள். உங்கள் கணவருக்கு மேலும் ரூ.19 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வரவேண்டி உள்ளது. அதை நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி ஆசிரியை சுதாவும், அதற்காக மோசடி நபர்கள் சொன்னபடி ஆன்லைனில் விண்ணப்பித்தார். ரூ.19 லட்சம் வாங்குவதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என்றும், அதை திருப்பி தந்து விடுவார்கள் என்றும் சுதாவிடம் பேசிய மோசடி நபர்கள், கொஞ்சம், கொஞ்சமாக ரூ.2½ கோடி வரை சுருட்டி விட்டனர்.

மேலும் 3 பேர் கைது

தான் மோசம் போனது பற்றி ஆசிரியை சுதா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், முருகேசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

டெல்லிக்கு சென்று முகாமிட்ட தனிப்படை போலீசார் மோசடி கும்பலைச் சேர்ந்த 7 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய டெல்லி கும்பலைச் சேர்ந்த அன்ஷிகா என்ற பெண் மற்றும் அமித் குமார், அக்ஷத்குப்தா என்ற மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்