சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்- 256 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஏற்றி வைத்து 256 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Update: 2021-08-15 22:11 GMT
ஈரோடு
சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஏற்றி வைத்து 256 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தேசிய கொடி
சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அவரது இல்லத்துக்கு சென்று அரசு மரியாதையுடன் வ.உ.சி. விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வந்தார்.
அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் மற்றும் அதிகாரிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியை வரவேற்றனர். அதன்பிறகு கலெக்டர் கொடி மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தேசிய கொடியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பாராட்டு சான்றிதழ்
மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் ஆகியோர் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்கள். தொடர்ந்து ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
அதன்பிறகு பல்வேறு துறைகளில் ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். 
இதில் கல்வி துறையில் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி உள்பட 21 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு துறையில் சர்வதேச அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த வகையில் இறகு பந்து பயிற்சியாளர் செந்தில்வேலன், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர் இனியன் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சமூக நலத்துறை
இதேபோல் போலீஸ் துறை சார்பில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உள்பட 30 பேருக்கும், கலை மற்றும் பண்பாட்டு துறையில் 5 பேருக்கும், கால்நடை பராமரிப்பு துறையில் 2 பேருக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் 22 பேருக்கும், தமிழ்நாடு சுகாதாரத்திட்டத்தில் 6 பேருக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் 10 பேருக்கும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 8 பேருக்கும், சித்த மருத்துவ துறையில் 6 பேருக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் 5 பேருக்கும், ஈரோடு மாநகராட்சியில் 20 பேருக்கும், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நகராட்சிகளில் தலா 5 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 17 பேருக்கும், ஊரக வளர்ச்சித்துறையில் 11 பேருக்கும், மகளிர் திட்ட அலுவலர்கள் 5 பேருக்கும், வேளாண்மைத்துறையில் 2 பேருக்கும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 3 பேருக்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் 18 பேருக்கும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் 3 பேருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 3 பேருக்கும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையில் 4 பேருக்கும், சமூக நலத்துறையில் 4 பேருக்கும், பொதுப்பணித்துறையில் 3 பேருக்கும், வட்டார போக்குவரத்து துறையில் 3 பேருக்கும், நில அளவை துறையில் ஒருவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தன்னார்வலர்கள்
சமூக பணிகளை செய்த தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என 18 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். 
இதில் உணர்வுகள் அமைப்பு சார்பில் அதன் தலைவர் மக்கள் ஜி.ராஜன் பெற்றுக்கொண்டார். இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எனவே மொத்தம் 256 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கொரோனா பெருந்தொற்று காரணமாக சுதந்திர தின விழா எளிமையாக நடத்தப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. மேலும், விழாவை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
எம்.எல்.ஏ.
இந்த விழாவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பயிற்சி உதவி கலெக்டர் ஏகம் ஜெ.சிங், ஆர்.டி.ஓ.க்கள் பிரேமலதா (ஈரோடு), பழனிதேவி (கோபி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி, முருகேசன், ஈஸ்வரன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்