தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
சுதந்திர தின விழா
பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா பெங்களூரு கப்பன் ரோட்டில் உள்ள மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சரியாக காலை 9 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அணிவகுப்பை பார்வையிட்டு மீண்டும் மேடைக்கு வந்த அவர் சுதந்திர தின உரையாற்றினார். குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று அவர் பேசியதாவது:-
மொழி, கலாசாரம், கலை, கல்வி, பொருளாதாரம் உள்பட எந்த துறையாக இருந்தாலும் சரி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுதான் அரசின் முக்கிய நோக்கம் ஆகும். 75-வது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பிரதமர் மோடி கூறினார். அதனால் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் விழா பெலகாவி, சிக்பள்ளாப்பூர், மண்டியா ஆகிய மாவட்டங்களில் கடந்த மார்ச் 12-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த 75-வது சுதந்திர தின விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும்.
தலைவர்களின் பங்களிப்பு
விடுதலை போராட்டத்தில் ஏராளமானவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். மகாத்மா காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், பகத்சிங், மவுலானா அபுல்கலாம் ஆசாத், நேரு உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பு வரலாற்று முக்கியமானது. விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன். வளர்ச்சியை ஏற்படுத்துவதாக நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். வளர்ச்சி தான் எங்கள் ஆட்சியின் மந்திரம்.
வெள்ளம், கொரோனா பரவல் போன்ற நேரத்தில் சிறப்பான முறையில் கர்நாடக அரசு செயல்பட்டது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் வளர்ச்சி பாதையில் நான் தொடர்ந்து பயணித்து வருகிறேன். வளர்ச்சி சக்கரம் எப்போதும் முன்னேறி செல்ல வேண்டும். நம்பகத்தன்மை, திறமை, நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலன் சார்ந்த ஆட்சியை நடத்துவது தான் எங்கள் அரசின் நோக்கம்.
தொழிலாளர்களுக்கு நிதி
அரசின் திட்டங்களை குறித்த காலத்திற்குள் செயல்படுத்துவது, மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது எங்களின் நோக்கம். திட்டங்கள் வெறும் காகிதத்தில் மட்டும் இருக்காமல், அவற்றை செயல்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். கொரோனா பரவலால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் நடுங்கிபோய் உள்ளன. அதே நிலையில் தான் இந்தியா, கர்நாடகம் உள்ளன.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நடவடிக்கைகளால் கொரோனா பரவலை சரியான முறையில் நிர்வகித்தோம். கர்நாடகத்தில் எடியூரப்பாவின் திறன்மிகு ஆட்சியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. மக்களின் உயிர்களை காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நாங்கள் மோசமான அளவில் நடவடிக்கை எடுத்தோம். பல்வேறு தரப்பு தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
ரூ.7,422 கோடி அளவில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில் 24 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டன. 4 ஆயிரம் படுக்கைகளுக்கு வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டது. கொரோனா பரவலை எதிர்கொள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் இதுவரை 3½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவற்றை சரிசெய்ய உடனடியாக தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளா, மராட்டிய எல்லை மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் ஐ.சி.யு. படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நிவாரண பணிகள்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் நலனில் கவனம் செலுத்தி வருகிறோம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுடன் வெள்ள பாதிப்புகளையும் சரியான முறையில் கையாண்டோம். நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் செய்யப்பட்டன. நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகன்னடா மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்தேன்.
முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 லட்சமும், பாதி சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.3 லட்சம், லேசான பாதிப்பு அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் வளர்ந்து வரும் மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று. விவசாயம், தொழில், சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறோம்.
கல்வி உதவித்தொகை
நகர-கிராம வளர்ச்சிக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க "ரைத வித்யாநிதி" திட்டம் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.6 ஆயிரத்துடன் கர்நாடக அரசு ரூ.4 ஆயிரம் வழங்குகிறது. இதுவரை விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 812 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் கிராம சுவராஜ்ஜிய கனவு நனவாக்கப்படும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. இன்னொருபுறம் கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. "மனே மனேகே கங்கே" திட்டத்தின் மூலம் நடப்பு ஆண்டில் 25 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
கட்டமைப்பு வசதிகள்
மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நகர உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அறிவியல் பூர்வமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிடதி அருகே கழிவு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெங்களூரு உலக அளவில் பிரபலமான நகரம். அதனால் பெங்களூருவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உலக தரத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி மக்களின் வாழ்க்கை தரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்-மந்திரியின் நவநகரத்தோனா திட்டத்தின் கீழ் ரூ.8,343 கோடி செலவில் ரோடுகள், கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் 3-வது கட்டமாக அம்ரித் மகோத்சவ நகரத்தோனா என்ற பெயரில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முன்னிலையில் உள்ளது.
மாணவர்களின் திறன்
புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும். 2-வது, 3-வது நகரங்களில் தொழில் நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை அதிகரிக்க ரூ.4,636 கோடி செலவில் 150 தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. கல்லூரிகளில் 2,500 ஸ்மாாட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் கற்றலை ஊக்கப்படுத்த 1.55 மாணவா்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது. இதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி என்ஜினியரிங் கல்லூரிகள் கன்னடத்திலும் கற்பிக்கும்.
மேகதாது திட்டம்
மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும். சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கூடுதல் நீர் ஒதுக்கீட்டை பயன்படுத்த இந்த அணை உதவும். தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாங்கள் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம். இந்த திட்டத்தில் இருந்து கர்நாடக அரசு பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இது குடிநீருக்கும், மின் உற்பத்திக்கும் அவசியமானது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
காலை 9 மணிக்கு தொடங்கிய விழா 10 மணிக்கு நிறைவடைந்துவிட்டது. 1 மணி நேரம் மட்டுமே விழா நடைபெற்றது. பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. போலீஸ் படைகளின் அணிவகுப்பும் இடம் பெறவில்லை. சுமார் ஆயிரம் பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பலத்த சோதனைக்கு பின்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விழா நடைபெற்ற மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.