தென்காசியில் சுதந்திர தினவிழா; கலெக்டர் கோபால சுந்தரராஜ் தேசிய கொடியேற்றினார்

தென்காசியில் சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் கோபால சுந்தரராஜ் தேசிய கொடியேற்றினார்.

Update: 2021-08-15 20:58 GMT
தென்காசி:
தென்காசியில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் கோபால சுந்தரராஜ் தேசிய கொடியேற்றினார்.

சுதந்திர தின விழா

நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உதயமான பிறகு 2-வது சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த விழாவில் காலை 9.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தேசிய கொடியேற்றினார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உடன் இருந்தார். 
பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் 2 வெண் புறாக்களை சமாதான புறாக்களாக பறக்கவிட்டார். இதனையடுத்து மூவர்ண பலூனையும் வானில் பறக்க விட்டார். பிறகு சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். முன்னதாக விழாவிற்கு வந்த மாவட்ட கலெக்டரை மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

78 பேருக்கு நற்சான்றிதழ்கள்

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கராஜன், புளியரை சப்-இன்ஸ்பெக்டர் ஞான ரூபி பரிமளா, செங்கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகனா உள்பட 15 பேர், பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலக துப்புரவு பணியாளர்கள் 10 பேர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் 10 பேர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலக தூய்மை பணியாளர்கள் 10 பேர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலக டாக்டர்கள் பிரேம்நாத், ஜூனைதாள் பிர்தோஸ், செவிலியர்கள் அனுசுயா, லீனாள் தேவி, ஆறுமுக கனி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் அலுவலக டாக்டர்கள் மணிமாலா, ரத்னபெத் முருகன், செவிலியர்கள் தங்கம், ராஜேஸ்வரி, ஆஸ்பத்திரி பணியாளர் முருகேசன், பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர்கள் உதயகுமார், முகமது இப்ராகிம், செங்கோட்டை அரசு சித்தா டாக்டர் கலா, மருந்தாளுனர் மோகன்ராஜ், மருத்துவமனை பணியாளர் வேலுச்சாமி, வருவாய் துறை அலுவலர்கள் 6 பேர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 6 பேர் மற்றும் கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்ட செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி, தென்காசி சாந்தி ஆஸ்பத்திரி என மொத்தம் 78 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். 

கலந்து கொண்டவர்கள்

இந்த விழாவில் தனுஷ் குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன், செல்லத்துரை, மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம் இப்ராகிம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரிடர் மேலாண்மை குழு தலைவரும் மாஸ் பாராமெடிக்கல் கல்லூரி தாளாளருமான முகமது அன்சாரி தலைமையில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் சானிடைசர் மற்றும் முககவசங்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்