நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர் 'சோனியா காந்தி'- டி.கே.சிவக்குமார் தவறுதலாக பேசியதால் சலசலப்பு
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர் சோனியா காந்தி என்று டி.கே.சிவக்குமார் தவறுதலாக பேசியதால் சலசலப்பு உண்டானது.
பெங்களூரு:
சோனியா காந்தி
கர்நாடக காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா நேற்று பெங்களூருவில் கொண்டாடப்பட்டது. அக்கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் டி.கே.சிவக்குமார் பேசுகையில், "நாட்டிற்காக ஏராளமான தலைவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அதில் நமது கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தியும் உயிர்த்தியாகம் செய்தார்" என்றார்.
ஊர்வலம்
டி.கே.சிவக்குமாரின் இந்த பேச்சை கவனித்த தலைவர்கள் ஒரு கனம் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தவறை அறிந்து கொண்ட அவர் மன்னிக்கவும், இந்திரா காந்தி என்று குறிப்பிட்டார். டி.கே.சிவக்குமாரின் இந்த பேச்சால் விழாவில் சலசலப்பு உண்டானது..
முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மெஜஸ்டிக்கில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு வந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.கே.சிவக்குமார் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தொண்டர்கள் நீளமான தேசிய கொடியை ஏந்தி வந்தனர்.